Tuesday, July 31, 2012

பாவை நியாஸின் பால்ய காலத்து நினைவுகள்

நெடுங்குளம் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது என்னுடன் தினகரன் என்ற மாணவன் படித்து வந்தான், அப்போது காலாண்டு பரீட்சை நடந்த சமயம், எங்களை கண்காணிப்பதற்கு 11 மற்றும் 12 ம் வகுப்புக்கான உயிரியல் ஆசிரியரை நியமித்திருந்தது பள்ளி நிர்வாகம். எங்கள் உயிரியல் ஆசிரியர் ஒரு முற்போக்குவாதி மற்றும் நாத்திகவாதி. முடி வெட்டாமல் சபரி மலைக்கு மாலை போட்ட மாணவ சாமியையும் அவரின் பிரம்பு பதம் பார்க்காமல் விடுவதில்லை. பள்ளியில் எந்த தேர்வு நடைபெறுகிறதோ அன்றைய தேர்வின் பெயரை விடைத்தாளின் மேல் எழுதுவது வழக்கம். நான் கேள்வித்தாளை பார்த்தவுடன், வலப்பக்க வயிறு லேசாக கலக்கியது, சுற்றி இருப்பவர்களை ஒரு முறை நோட்டம் விட்டேன். அனைவரும் படித்துவிட்டு வந்தவர்கள் போலவே ஒரு மாயை தோன்ற, சரி கொஞ்ச நஞ்சம் தெரிந்தவற்றை எப்படியாவது ஒப்பேத்திவிடலாம் என்றெண்ணி இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு நிமிர்கையில், தினகரனின் அலறல். உயிரியல் ஆசிரியர் தினகரனின் முதுகை உரித்துக் கொண்டிருந்தார். அனைவரும் தினகரனின் அடியிலேயே கவனம் இருந்ததால், என்னால் சிவகுரு நாதனின் 5 மதிப்பெண் பதில் இரண்டை காப்பி அடிக்க முடிந்தது. சிவகுரு நாதனும் அந்த அடியை ரசித்து பார்த்து கொண்டிருந்தான், ஆசிரியர் கரும்பலகையின் முன் வந்து நின்று, "அந்த நாதாரி போல யாராச்சும் எழுதிருக்கீங்களா?" என அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பினார். நாங்கள் என்னவென்று வினவ அஞ்சி விழித்துக்கொண்டிருக்க.. ஆசிரியரே முருகவேலை எழுப்பி இன்று என்ன பரீட்சை என கேட்டார். "இங்க்லீஷ் பரிச்ச சார்" என்றான். "அந்த நாதாரி ஆங்கிலம்னு தமிழ்ல எழுதி வச்சிருக்கு, நாதாரிகளா இங்க்லீஷ் பரிட்சைய தமிழ்ல எழுதுனா? தமிழ் பரிட்சைய இங்க்லீஷ்ல எழுதுவீங்களா?'' என கூறிவிட்டு ''வேற எவனாச்சும் அந்த மாதிரி எழுதி இருக்குறவன் எல்லாம் எழுந்து நில்லுங்க'' என கர்ஜித்தார். தொப்பென்று ஒரு மாணவன் மட மடவென சரிய மாணவர்கள் அனைவரும் ஓடிச்சென்று அவனை தூக்கினர், அவன் வேறு யாருமல்ல நான்தான். நாங்க எல்லாம் அப்பவே அப்பூடி...